Loading...
போலிப் பெயரில் துருக்கி குடியுரிமை! சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் நவ்பிரீத் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தல்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் நவ்பிரீத் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தல்

போலிப் பெயரில் துருக்கி குடியுரிமை! சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் நவ்பிரீத் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
12:53 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கார்ட்டெலின் முக்கிய தலைவனான நவ்பிரீத் சிங் துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய புலனாய்வு அமைப்புகளின் தொடர் தீவிர முயற்சியால் சாத்தியமான இந்த நடவடிக்கையை வரலாற்று சாதனை எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நவ்பிரீத் சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

போலி அடையாளம்

போலி அடையாளமும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலும்

இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நவ்பிரீத் சிங், நவாப் விர்க் என்ற போலிப் பெயரிலும் போலி ஆவணங்கள் மூலமாகவும் துருக்கி நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார்.

மேலும், தலைமறைவாக இருந்தபடியே ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவிலான ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்துள்ளார்.

இந்தியப் புலனாய்வு அமைப்புகள் அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிந்து துருக்கி அதிகாரிகளின் உதவியுடன் நாடுகடத்தினர்.

விசாரணை

டெல்லியில் தொடங்கிய விசாரணை மற்றும் அஜர்பைஜான் தொடர்பு

இவ்வழக்கின் விசாரணை 2021 ஆம் ஆண்டுத் தெற்கு டெல்லியில் ரிஸ்வான் காஷ்மீரி என்பவரது கைதில் தொடங்கியது.

அவரின் விசாரணையின் அடிப்படையில் ஃபரிதாபாத்தில் வாகனங்களில் கடத்தப்பட்ட 281 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இந்த சதித் திட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த நவ்பிரீத் சிங்கின் உறவினர் பிரப்தீப் சிங் என்பவரை, கடந்த மே மாதம் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரிலிருந்து சிபிஐ மற்றும் டெல்லி காவல்துறை குழுவினர் வெற்றிகரமாக இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டுவந்தனர்.

ADVERTISEMENT

இந்தியா இலக்கு

2029-க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா இலக்கு

நவ்பிரீத் சிங்கின் நாடுகடத்தலுக்கு காரணமான புலனாய்வு அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் நெட்வொர்க்குகளுக்கு எதிரான இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் 2029 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து போதைப்பொருள் கார்ட்டெல்களையும் முற்றிலும் வேரறுத்து அழிப்பதில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT