வெளிநாட்டில் படிக்க மத்திய அரசின் நிதி உதவி! தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம் 2026: விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குறைந்த வருவாய் கொண்ட எளிய பின்னணி மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் பயில்வதற்காக தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. 2026-27 கல்வி ஆண்டுக்கான இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில சிறப்பான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
125 மாணவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் 125 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்!
தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 125 தகுதியான மாணவர்களுக்குப் புதிய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட பிரிவினர், சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடிப் பழங்குடியினர், அத்துடன் நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் பாரம்பரியக் கைவினைஞர்களின் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
குறைந்த வருவாய் கொண்ட மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இட ஒதுக்கீடு
சமூகப் பிரிவு வாரியான இட ஒதுக்கீடு விவரங்கள்
இந்த 125 உதவித்தொகை இடங்களில், பட்டியல் சாதியினருக்கு 115 இடங்களும், சீர்மரபினர் மற்றும் நாடோடிப் பழங்குடியினருக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் பாரம்பரியக் கைவினைஞர்களின் பிள்ளைகளுக்கு 4 இடங்கள் வழங்கப்படுகின்றன.
இதில் கூடுதல் சிறப்பாக, அனைத்துப் பிரிவுகளிலும் மொத்தம் உள்ள உதவித்தொகை இடங்களில் 30 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்குத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எளிய பின்னணியை சேர்ந்த பெண் மாணவிகள் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நிதி விநியோக முறை
கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் நிதி விநியோக முறை
அம்பேத்கர் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை நிதியானது நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுவதில்லை.
மாறாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அங்கிருந்து மாணவர்களின் கல்விக் கட்டணம், பராமரிப்பு செலவு மற்றும் இதர படிகள் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்படுகின்றன.
விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல்கள்
விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு 2026-27 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரிவாகப் படித்தறியலாம்.
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தும் தகுதி அளவுகோல்கள், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை அறியலாம்.
தகுதியான எளிய பின்னணி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உயர்கல்வி பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.