கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெருநகரமாக உள்ளது கோவை தான். கோவையை மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கிறது. அதில் சேலத்தில் துவங்கி கோவை, கொச்சி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி செல்லும் வழிகளுள் என்.எச்.544 மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பாதைக்கு மட்டுமே 27கி.மீ., பைபாஸ் ரோடு உள்ளது. மற்றொரு தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.181 பாதையில் எவ்வித விரிவாக்க பணியும் மேற்கொள்ளவில்லை. கோவை-மேட்டுப்பாளையம் பகுதி மட்டும் அகலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மற்ற பாதைகள் மிககுறுகலாக, பைபாஸ் ரோடும் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல்கொண்ட ரோடாகவே உள்ளது. மூன்றாவது நெடுஞ்சாலையான என்.எச்.,948 மற்றும் 83 ரோடு மிகமோசமான நிலையில் உள்ளது. இங்கும் பொள்ளாச்சி-கோவை பகுதி மட்டும் சில வருடங்களுக்கு முன்னர் ரூ.480கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோவையை புறக்கணிப்பதாக மக்கள் அதிருப்தி
இருவழி பாதையாக உள்ள கோவை-சத்தி ரோடு அனைத்து நாட்களிலும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படுவதோடு விபத்துகளும் அதிகமாக ஏற்படுகிறது. இந்த மூன்று ரோடுகளும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் வசம் உள்ள நிலையில் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்னரே விரிவாக்கப்பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் திண்டுக்கல்-சத்தி வரை 10ஊர்களில் பைபாஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்பும் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து குறும்பாளையம்-சத்தி 98கிமீ ரோட்டினை 4வழிபாதையாக மாற்றவும், 5ஊர்களுக்கு 3பைபாஸ் சாலையையும் ரூ.1,200கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக 731ஏக்கர் நிலத்தினை கோவை,ஈரோடு மாவட்டங்களில் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்பணியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எந்தவொரு திட்டத்தினை அரசு அறிவித்தாலும் கோவையை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.