பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. எனினும் அவர் அதிஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கறுப்பு நிற ஸ்கார்பியோ கார், மற்றொரு காரின் மீது மோதியதால், முப்தி சென்ற காரின் பானெட் விபத்தில் நன்றாக நசுங்கி காணப்பட்டது. விபத்துக்குள்ளான மெகபூபா முப்தி சென்ற கறுப்பு நிற ஸ்கார்பியோனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஒரு பாதுகாப்பு அதிகாரி காயத்துடன் உயிர் தப்பினார்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபல் என்ற இடத்திற்கு மெகபூபா முப்தி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. எனினும், எந்த காயமும் இல்லாமல் முப்தி உயிர் தப்பினார். இருப்பினும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். "அனந்த்நாக் செல்லும் வழியில் மெகபூபா முப்தியின் கார் இன்று பயங்கர விபத்தை சந்தித்தது. கடவுளின் கருணையால் அவரும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் பலத்த காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்" என்று அவரது மகள் இல்திஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விபத்து ஏற்பட்ட பிறகு, மெகபூபா முப்தி திட்டமிட்டபடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபல் சென்றார்.