திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?
திருப்பதி லட்டுகளில் தரம் தாழ்ந்த பொருட்களும், பசு நெய் அல்லாத பொருட்களும் சேர்க்கப்பட்டது என லேப் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை உண்டானதில், தற்போது பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பசும்பாலின் நெய் அல்லாத பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்ததாக ஆய்வக அறிக்கையை மேற்கோள் காட்டி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியது, கடந்த ஆண்டு புகழ்பெற்ற நந்தினி நெய் சப்ளை நிறுத்தப்பட்டது உடன் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தை தூண்டியுள்ளது.
திருப்பதி லட்டுவில் முக்கிய மூலப்பொருள் நெய்
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் ஸ்ரீவாரி லட்டுகளின் சுவையை தீர்மானிப்பதில் நெய்யின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வாரியம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நெய் சப்ளை செய்வதற்கான டெண்டர்களை பெற்று, ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நெய்யை கொள்முதல் செய்கிறது.
நந்தினி நெய் ஏன் நிறுத்தப்பட்டது?
கடந்த ஆண்டு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கம், கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து (KMF) லட்டுகளுக்கு நந்தினி நெய்யை வாங்குவதை, ஏறக்குறைய 15 வருட கூட்டணிக்கு பின்னர், விலை நிர்ணயத்தினை காரணம் காட்டி நிறுத்தியது. கர்நாடகா பால் கூட்டமைப்பு, பால் விலை உயர்வால் அதன் நெய்யை போட்டி விகிதத்தில் வழங்குவதைத் தடுத்ததால் ஏலப் பணியைத் தவிர்த்தது. நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. எனவே, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. "இனிமேலும் லட்டுகள் ஒரே மாதிரியாக இருக்காது. நந்தினியை விட எந்த பிராண்ட் குறைந்த விலையில் நெய்யை வழங்கினாலும், தரம் பாதிக்கப்படும்"என KMF தலைவர் நாயக் அப்போது தெரிவித்தார்.
அரசியல் சர்ச்சையை தூண்டிய நெய் விவகாரம்
திருப்பதி கோயில் விவகாரங்களில் அரசியல் தலையீடு செய்வதாக பாஜக குற்றம் சாட்டியது. "சமரசம் செய்யப்பட்ட லட்டு தரம்" மற்றும் மற்றொரு பிராண்டில் இருந்து நெய்யை பெற கோவில் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருப்பினும், லட்டுகளின் தரத்தை மேம்படுத்த சந்திரபாபு நாயுடுவின் உத்தரவுக்குப் பிறகு, KMF நந்தினி நெய்யை ஆகஸ்ட் முதல் TTDக்கு வழங்கத்தொடங்கியது. திருப்பதியில் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. லட்டு தயாரிக்க, தினமும் 400-500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ திராட்சை, 200 கிலோ ஏலக்காய் தேவைப்படும். சமீபத்திய சர்ச்சையைத்தொடர்ந்து, தரமான நெய் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆலோசனை வழங்க TTD ஒரு குழுவை அமைத்துள்ளது.