புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள், நூற்பாலைகள், போர்வெல் வண்டிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்க படுகிறார்கள் என்பது போன்ற சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த போலி வீடியோ பதிவுகளால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பரவி வரும் போலி வீடியோக்கள் மீதான பயத்தினை போக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழிலாளர்கள் பயத்தினை போக்க நடவடிக்கை
அதில் ஒரு பகுதியாக, சேலம் சாலையில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் கலந்துரையாடினார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அப்போது அவர்கள், தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு மற்றும் காவல் துறை என்றும் பாதுகாப்பாக இருக்கும். போலி வீடியோ பதிவுகளை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம். ஏதேனும் பிரச்சனை என்றால் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தகவலை கூறுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளனர். மேலும் இதில் தொழிலாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் அவர்கள் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.