அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை, கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல்லில் உள்ள பழனியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. சனிக்கிழமை காலை நடந்த தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், ஆன்மீக பெரியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழகம் மற்றும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி, கண்காட்சி அரங்குகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கண்காட்சி அரங்கை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒரு அங்கமான அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன் இணைந்து கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) வரை கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநாட்டிற்கு வரும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மூன்று வேளை அறுசுவை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.