
மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
"நெருக்கடியான பகுதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஒத்திகையை நடத்துமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து துணை போலீஸ் கமிஷனர்களும் அந்தந்த அதிகார வரம்புகளில் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்." என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள கோவில்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரண்டு பிரபலமான மதத் தளங்களைக் கொண்ட க்ராஃபோர்ட் மார்க்கெட் பகுதியில் ஒரு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
பண்டிகை காலம்
பண்டிகை காலம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
இது தொடர்பான கூடுத விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை. எனினும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்குத் தயாராகும் ஒரு சாதாரண நடவடிக்கையே இந்த பாதுகாப்பு அதிகரிப்பு என்று அதிகாரிகள் கூறினர்.
துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி போன்ற பெரிய கொண்டாட்டங்களுக்கு மும்பை தயாராக உள்ளது.
மேலும், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலுக்கும் மும்பை நகரம் தயாராகி வருகிறது.
"வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில், நாங்கள் கிராஃபோர்ட் மார்க்கெட் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தி வருகிறோம்," என்று அதிகாரி கூறினார்.
இதற்கிடையே, மாட்டுங்காவில், காலையில் போலீஸ் சோதனைக்குப் பிறகு ஒரு கோயில் பக்தர்களுக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.