மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
மும்பையில் நேற்று மாலை வீசிய கடுமையான புயலின் போது ஒரு பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்த 100 அடி விளம்பர பலகை, புயலின் கோர தாண்டவத்தால், நேரடியாக கீழே உள்ள எரிபொருள் நிலையத்தின் மீது விழுந்தது. அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. மும்பை தீயணைப்புப் படை மற்றும் பிற சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் இணைந்து உதவுவதற்காக NDRF இரண்டு குழுக்களை அனுப்பியுள்ளது.
ஈகோ மீடியா உரிமையாளர் மீது வழக்கு பதிவு
ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் விளம்பர பதாகையால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் காவல்துறை வீட்டுவசதிப் பிரிவினால் காவல்துறை நலன்புரி கார்ப்பரேஷனுக்கு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் ஈகோ மீடியா இந்த விளம்பர பதாகையை வைத்துள்ளது. வளாகத்தில் ஈகோ மீடியாவின் நான்கு விளம்பர பதாகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஈகோ மீடியா உரிமையாளர் மற்றும் மற்றவர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு விளம்பர பதாகைகளுக்கும் காவல் உதவி ஆணையர்(ரயில்வே) மூலம் ஈகோ மீடியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதை நிறுவுவதற்கு முன் BMC யிடமிருந்து எந்த அங்கீகாரமும் தடையில்லாச் சான்றிதழும்(NOC) பெறப்படவில்லை.