1.5 கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்: மும்பை BMW விபத்தின் திடுக்கிடும் தகவல்கள்
மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார். இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விபத்தின் போது பதிவான பல சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதன் மூலம், மும்பை BMW விபத்தின் போது நடந்த திடுக்கிடும் விவரங்கள் தெரியவந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த BMW கார் விபத்தில் சிக்கிய பெண்ணை கிட்டத்தட்ட 1.5 கி.மீ வரை இழுத்துச் சென்றதாக உள்ளூர் நீதிமன்றத்தில் போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர்
1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்த பெண்
மீனவர்களான காவேரி நக்வாவும் அவரது கணவர் பிரதீக் நக்வாவும் சசூன் டாக்கில் மீன்களை வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். அப்போது, சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டிச் சென்ற BMW கார் அவர்கள் சென்ற ஸ்கூட்டியை மோதிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது. அந்த விபத்தின் போது காரில் சிக்கிய காவேரி நக்வாவை 1.5 கி.மீ வரை மிஹிர் ஷா இழுத்து சென்றதற்கான ஆதரங்களும் கிடைத்துள்ளன. 1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட காவேரி நக்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது கணவர் காயங்களுடன் உய்ரிபிழைத்துவிட்டார். இந்நிலையில், ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்துவிட்டனர். ஆனால், அவரது மகன் மிஹிர் ஷா தப்பியோடிவிட்டார்.