சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியால் 51 முறை குத்தப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. கம்பியால் குத்தப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு மூச்சு திணறலால் குழந்தை இறந்துள்ளது. ஷாஹோல் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக இன்று(பிப் 4) எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தபோது, 15 நாட்களுக்கு முன்பு கண்மூடித்தனமான நம்பிக்கையினால் ஏற்பட்ட விளைவுகளை கண்டறிந்தனர். மேலும், குழந்தையின் நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது" என்று ஷாஹோல் கலெக்டர் வந்தனா வைத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன: டாக்டர் ஹிதேஷ்
"உள்ளூர் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் குழந்தையின் தாயிடம் அறிவுரை கூறி, குழந்தையை சூடான கம்பியால் குத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்" என்று வந்தனா வைத் மேலும் கூறினார். மத்தியப் பிரதேசத்தின் பல பழங்குடியின பகுதிகளில், நிமோனியாவுக்கு "சிகிச்சையளிக்க" சூடான இரும்பு கம்பியால் குத்துவது வழக்கம். மருத்துவரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, "கம்பியால் குத்தப்படுவது மரணத்திற்கு வழிவகுக்கும். குத்தப்பட்ட இடங்களில் நோய்த்தொற்று கிருமிகளால் இன்பெக்ஸன் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார். "இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அந்தப் பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் வாஜ்பாய் கூறியுள்ளார்.