இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம்
மதர் டைரி முழு கிரீம் பாலின் விலையை, இன்று முதல் உயர்த்தப்போவதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது விற்கப்படும் விலையுடன் ரூ.2 /- விலை கூடுதலாக ஏற்ற போவதாக அறிவிப்பு வந்துள்ளது. எனினும், மதர்டைரி பசும்பால் மற்றும் டோக்கன் பால் வகைகளின், சில்லறை விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. நடப்பாண்டில், இது ஐந்தாவது விலையேற்றம் ஆகும். மேலும், மதர் டெய்ரி தனது முழு கிரீம் பால் விலையை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்), லிட்டருக்கு ரூ.64ல் இருந்து ரூ.66க்கு உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது மற்ற மாநிலத்திற்கும் பொருந்துமா என தெரியவில்லை. இதற்கு முன்னர், மார்ச், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
பாலின் விலை உயர்வு
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டது. ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரீமியம் பாலான, முழு கிரீம், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விலை, லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதோடு பாலின் கொள்முதல் விலையும், லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டது. சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் (100 கிராம்) 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 500 கிராம் வெண்ணெய் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்தது.