
ராமநாதபுரம் மசூதியில் தினசரி 8 மணிநேரமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி
செய்தி முன்னோட்டம்
இஸ்லாமியர்களின் நோன்பு விரதத்தின் முக்கிய உணவாகவும், பானமாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட உணவாகவும் கருதப்படுவது நோன்பு கஞ்சி.
இந்த புனித ரமலான் மாதம் முழுவதும், சூரிய உதயம் தொடங்கி, அஸ்தமனம் வரை எந்த உணவும், நீரும் அருந்தாமல் பக்தியுடனும், சுய ஒழுக்கத்துடன் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமிய சகோதரர்களுக்காக பள்ளிவாசலில் நோன்பு காஞ்சி தயார் செய்து தருவது மரபு.
இஸ்லாமியர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்து, நோன்பு கஞ்சியை முதலில் சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் ராமநாதபுரம் பாம்பனில் உள்ள மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசலில், தினசரி இஸ்லாமியர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சியை வழங்கி வருகின்றனர். இதை தயாரிக்க 8 மணி நேரம் ஆகிறது என நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
செய்முறை
நோன்பு கஞ்சி செய்முறை
நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணி காலை 9 மணிக்கு துவங்குகிறது.
5 முதல் 10 கிலோ வரை தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளை நறுக்கி சேர்த்து, காலை 10 மணியளவில் அடுப்பில் சமைக்க துவங்குகிறார்கள்.
சுமார் 1000 நபர்கள் சாப்பிடும் அளவில் பெரிய சமையல் பாத்திரத்தில் எண்ணெய், பட்டை, கிராம்பு, கடுகு, உளுந்தம்பருப்பு, மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அதோடு, 5 மணி நேரம் ஊறவைத்த அரிசி, பருப்பு, வெந்தயம் சேர்த்து, ஒரு மணிநேரம் சமைத்து. கடைசியாக, தேங்காய் பால் சேர்த்து, 2 மணிநேரம் தம் கட்டிநிலையில் வைத்தால், நோன்பு கஞ்சி தயார்.