விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னர் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, அதிகரிக்கும் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக்கு அனுப்பட்ட அறிக்கைக்கு, அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 23 நாட்களில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.
புதிய நாடாளுமன்றத்தில் முடிவடையும் கூட்டத்தொடர்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் நாட்டில் தற்போது நடைபெறும் பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா என சுமார் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டத்தொடருக்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெங்களுருவில் விவாதித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், மத்திய அரசு, இந்த நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சியினரிடம் இருந்து ஒருமித்த வகையில், பலத்த எதிர்ப்பை சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.