காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் வரும் 10ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
மே 13ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்கிய நிலையில் அங்கு ஆளும் கட்சியான பாஜக'வும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் புயல் வேகத்தில் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பெருமளவில் பணம் பரிமாறப்படுவதால் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாகவே மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வருமான வரித்துறை நேற்று(மே.,4) நடத்திய ஆய்வு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் இருந்து ரூபாய் 1 கோடியினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
பணம்
மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண பை
கர்நாடகா மாநிலம் புத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் அசோக்குமார் ராய்.
இவருடைய சகோதரரான சுப்பிரமணிய ராய் மைசூரில் வசிக்கிறார்.
அவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் வீட்டுக்குள் பணம் ஏதும் சிக்கவில்லை.
பின்னர் வீட்டிற்கு வெளியிலுள்ள பூந்தொட்டி, தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது அங்கு ஒரு அழகான மரம் இருந்துள்ளது.
அதில் ஒரு பை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் சுமார் ரூ.1 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.