ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்வராக 4 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார். இந்த அறிவிப்பை, புவனேஷ்வரில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக அரசாங்கத்தில் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகிய இரு துணை முதலமைச்சர்கள், மோகன் சரண் மாஜிக்கு உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று மாலை ஒடிசா முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகா பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு
யார் இந்த மோகன் சரண் மாஜி?
பழங்குடியினத் தலைவரான மோகன் சரண் மாஜி, கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 87,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிவா மஞ்சரி நாயக் ஆகியோரை எதிர்த்து வெற்றி பெற்றார். மோகன் சரண் மாஜி தலைமையிலான அமைச்சரவை, வரும் ஜூன் 12 ஆம் தேதி, நாளை மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிர்யேற்பு விழாவில் பங்குபெறுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புவனேஸ்வர் வருகிறார் என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பிரதமருடன், பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.