RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு?
RRTS (Regional Rapid Transit System) திட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 21) முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது RRTS ரயில் சேவை. பாரம்பரியமான ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை அல்லாத புதிய வகையிலான ரயில் சேவையே இந்த RRTS, சுருக்கமாக ரேபிட்எக்ஸ் (RapidX). பாரம்பரிய ரயில் சேவையானது மிக அதிக தூரங்களுக்கு முக்கியமான நகரங்களை இணைக்கு வகையிலான பயணத்தை வழங்கும். மெட்ரோ ரயில்களானது ஒரு நகருக்குள்ளேயே குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு மட்டும் விரைவான பயணச் சேவையை வழங்கும்.
RRTS என்றால் என்ன?
ஆனால் மேற்கூறிய இரண்டு வகையிலும் சேராமல், இரு நகரங்கள் அல்லது ஒரு நகரம் மற்றும் அந்நகரத்தைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் தொழிற்துறை பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோவை விட நீண்ட தொலைவிற்கான பயண சேவையை இந்த RRTS திட்டம் மூலம் வழங்கவிருக்கின்றனர். டெல்லி முதல் மீரட் வரை 82 கிமீட்டர்களுக்கு இந்தியாவின் முதல் RRTS வழித்தடம் திட்டமிடப்பட்டது. அதில் முதற்கட்டமாக டெல்லியில் உள்ள சஹிதாபாத் முதல் துகாய் டெபாட் வரை 17 கிமீட்டர்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அந்த வழித்தடத்தில் RRTS ரயில்களை நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் புதிய RRTS ரயில்களுக்கான பயண டிக்கெட் கட்டணம் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன.
RRTS ரயில் டிக்கெட் கட்டணங்கள்:
மேற்கூறிய வகையில் சஹிதாபாத் முதல் துகாய் டெபாட் வரையிலான 17 கிலோமீட்டர்களில் ஐந்து நிறுத்தங்களைக் கொண்டிருக்கிறது RRTS ரயில் சேவை. இந்த ரயில்களானது ஐந்து சாதாரண கோச்கள் மற்றும் ஒரு ப்ரீமியம் கோச்சோடு இயக்கப்படவிருக்கின்றன. இந்த 17 கிலோமீட்டர்கள் பயணத்திற்கு சாதாரண கோச் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆகவும், ப்ரீமியம் கோட் டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே வழித்தடத்தில் பிற பயணச் சேவைகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம், பிற நாடுகளில் இதே போன்ற சேவைக்கு பெறப்படும் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.