சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
பிரதமர்மோடியை சீன நெட்டிசன்கள் 'தி இம்மார்டல்'(அழிவில்லாதவர்) என்று பயபக்தியுடன் குறிப்பிடுகிறார்கள் என்று தி டிப்ளமேட் பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார். 'இந்தியாவை சீனா எப்படி பார்க்கிறது?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார். அதில் அவர், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சமநிலையோடு பராமரிக்கபடுவதாகவும் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலான சீனர்களுடைய கருத்தும் இப்படி தான் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். "இந்தியா மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்குரிய நாடாக உள்ளது. அதேசமயம் சீனா மேற்கத்திய நாடுகளின் எதிரியாக மாறியுள்ளது. ரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்ட இரு நாடுகளை ஏன் மேற்கத்திய நாடுகள் இரு வேறு நடத்துகிறது?" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
ஒரு நாள் இந்தியா வளர்ந்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமானால் இந்தியாவையும் அமெரிக்கா எதிரியாக தான் நடத்தும் என்கின்றனர் சீனர்கள். சீனாவை பெரும் எதிரி நாடாக அமெரிக்கா கருதுவதற்கு அதுவே முக்கிய காரணம். மேலும், சீனர்கள் இந்தியாவை வளர்ச்சியடையாத நாடாக பார்க்கின்றனர். அதனால், இந்தியா பல நாடுகளுக்கு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் அதிகம் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் சிலர் மாட்டு சிறுநீரை பயன்படுத்தியது, போன்ற விஷயங்களை சீனர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதனால் அவர்களை பொறுத்தவரை இந்தியா ஒரு பிற்போக்கான நாடாக பார்க்கப்படுகிறது. எனினும், மோடியின் தலைமையில் இந்தியா பிற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.