கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு
திமுகவும், அதிமுகவும் தங்களின் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்ட நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று தேர்தலை சந்திப்பது குறித்து தங்கள் கட்சியின் பொது குழுவை இன்று கூட்டியிருந்தார். நிர்வாகிகளுடன் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கமல்,"கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும். கூட்டணி அமைத்தாலும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் இருக்க வேண்டும். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்" என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி குறித்து வெளியான தகவல்
நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மநீம துணைத் தலைவர் மவுரியா, "தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனில் மக்கள் நீதி மய்யம் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது. தலைவர் கமல்ஹாசன் கொள்கை, சிந்தனைகளுடன் ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமையும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்து வராவிட்டால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயங்க மாட்டோம் என முடிவெடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மூன்றாம் கூட்டணியாக சிறு கட்சிகளுடன் கூட்டணி போட்ட கமல், இந்த முறை காங்கிரஸ் உடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சில காலமாகவே திமுக கட்சியுடன் இணக்கமாக இருப்பதும் இதையே காட்டுகிறது.