Loading...
2 மணி நேரம் முன்கூட்டியே சென்ற ரயில்; பயணிக்கு ₹15,000 வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பயணிக்கு ₹15,000 வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

2 மணி நேரம் முன்கூட்டியே சென்ற ரயில்; பயணிக்கு ₹15,000 வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2026
01:37 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பயணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2024 ஜூன் 10 அன்று கோவாவின் மடோனிலிருந்து புது டெல்லிக்குத் தனது குடும்பத்துடன் செல்ல ₹10,620 செலவில் 3 பயண சீட்டுகளை அவர் பதிவு செய்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்குச் சென்ற போது, ரயில் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றுவிட்டது தெரியவந்தது. இது குறித்துக் கேட்டபோது ஐஆர்சிடிசி தான் தகவல் தெரிவிக்க வேண்டும் என ரயில் நிலைய அதிகாரி கூறியதால், அவர் விமானம் மூலம் டெல்லி செல்ல நேரிட்டது.

ரயில்வே நிர்வாகம்

மழைக்கால கால அட்டவணை குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கம்

புகாருக்குப் பதிலளித்த இந்திய ரயில்வே நிர்வாகம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 முதல் அக்டோபர் 30 வரை கொங்கன் பாதையில் மழைக்கால கால அட்டவணை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது.

இந்த காலத்தில் ரயில் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கமானது என்றும், புதிய அட்டவணை ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகள் மற்றும் கொங்கன் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்ததாகவும் வாதிட்டது.

எனவே, புதிய நேரத்தை அறிந்துகொள்ளத் தவறியதே பயணி ரயிலைத் தவறவிட்டதற்குக் காரணம் என்றும், ஐஆர்சிடிசி தனக்கும் இதில் தொடர்பில்லை என்றும் வாதிட்டன.

கடும் விமர்சனம்

ரயில்வே நிர்வாகத்தை கடுமையாக சாடிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் கிரண்ஜித் கவுர் அரோரா மற்றும் உறுப்பினர் சுமன் கண்ணா அடங்கிய அமர்வு, பயணிகள் சரியான நேரத்திற்குத் தரமான சேவையை பெற உரிமையுள்ளவர்கள் எனத் தீர்ப்பளித்தது.

ரயில்வே நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகளுக்குப் பயணிகளைப் பலிகடா ஆக்க முடியாது என்றும், நேர மாற்றத் தகவலை பயனாளியின் கைபேசிக்கு நேரடியாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியது.

முறையான முன்னறிவிப்பு தராதது ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி அமைப்புகளின் தெளிவான சேவைக் குறைபாடே ஆகும் எனக் கண்டித்தது.

ADVERTISEMENT

இழப்பீடு வழங்க உத்தரவு

பயணிக்கு கட்டணத் தொகை திரும்ப அளிப்புடன் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக நடவடிக்கையை உறுதிசெய்த நுகர்வோர் ஆணையம், பாதிக்கப்பட்ட பயணிக்கு வடக்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய மூன்றும் இணைந்து ₹15,000 வழங்க உத்தரவிட்டது.

இதில் பயணச்சீட்டுக்கான முழுத் தொகையான ₹10,620 திரும்பத் தரப்பட வேண்டும் என்றும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுகளுக்காகக் கூடுதலாக ₹5,000 இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

நுகர்வோர் நலனை உறுதி செய்யும் புதிய தீர்ப்பு ரயில் பயணிகள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT