திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழக நிதி அமைச்சர் பதவியிலிருந்து பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் மிசா பாண்டியன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும், திமுக முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்தவர் தான் இந்த மிசா பாண்டியன்.
மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த இவர், பின்னர் இடையில் அதிமுக கட்சியில் இணைந்தார்.
மீண்டும் அங்கிருந்து திமுக கட்சிக்கே தாவிய இவர் முதலில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக இருந்துள்ள நிலையில், தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக உள்ளார்.
இந்நிலையில், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் இவரது மனைவி பாண்டி செல்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மண்டல தலைவர் பதவியினை வாங்கி கொடுத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மிசா
மிசா பாண்டியன் மீது வார்டு கவுன்சிலர் நூர்ஜகான் புகார்
இதனைத்தொடர்ந்து தனது மனைவி மண்டல தலைவர் பதவியில் உள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக மிசா பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்று வந்துள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், இவரின் தலையீடு காரணமாக திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.
மேலும், மண்டல மற்றும் மாநகராட்சி கூட்டங்களில் வார்டு பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினால் அவர்களை இவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, 54வது வார்டினை சேர்ந்த கவுன்சிலர் நூர்ஜகான் வார்டு பிரச்சனை குறித்து பேசுகையில், அவரை இவர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து நூர்ஜகான் திமுக மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாக நூர்ஜகானும், மிசா பாண்டியனும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளிவந்தநிலையில், மிசா பாண்டியனை திமுக'விலிருந்து இடைநீக்கம் செய்து கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.