அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது
தமிழக அமைச்சரும் திமுக தலைவருமான செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திடீரென்று அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கூறினர். மேலும், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். இதனையடுத்து, இன்று அதிகாலை முதல் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், 5 மணி நேரத்திற்கு பின் அவரது அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அறுவை சிகிச்சை, காலை 10 மணி வரை நடைபெற்றது. சென்னை காவேரி மருத்துவமனையை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் A.R. ரகுராம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அமைச்சரின் இதய நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், "அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது." என்று காவிரி மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.