தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், பாலியல் குற்ற வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழகத்தில் 32 மகளிர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகள் தலைமையிலும், 33 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் குற்றவியல் நடுவர் தரத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. நீதிபதிக்கான காலி பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் அவை விரைந்து நிரப்பப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து எம்.எச்.ஜவாஹிருல்லா, குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே உள்ளது. 14% வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.
கூடுதல் போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்
வழக்கு மீதான விசாரணை தாமதமாவதால் குற்றவாளிகளுக்கு சாதகமாக அது அமைந்துவிடுகிறது என்றும் கூறியுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா. மேலும் அவர், கூடுதல் போக்ஸோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரகுபதி, போக்ஸோ வழக்குகள் அதிகளவில் பதிவாகும் மாவட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 100 வழக்குகளுக்கு கீழ் உள்ள மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 50% விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் 1,820 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 753 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் 2022ம் ஆண்டில் 1,860 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 842 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ குற்ற வழக்குகளில் இருந்து யாரும் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.