
அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கின் விசாரணையினை கையில் எடுத்தார்.
அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று(செப்.,7)ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் உயர்நீதிமன்ற பதிவுத்துறையினை இணைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், தாமாக முன்வந்து ஒரு வழக்கினை விசாரணைக்கு எடுக்கையில் லஞ்சஒழிப்புத்துறையின் விளக்கத்தினை கேட்டிருக்கவேண்டும் என்றும், மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் இருப்பதனை கருத்தில் கொள்ளாமல் விசாரணையினை துவங்கியதாகவும் குறிப்பிட்டார்.
விசாரணை
அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஒரே கருத்தினை கூறியதாக தகவல்
இதனை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதனை தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும்,
அதனால் விசாரணையினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். இதே கருத்தினை அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் வலியுறுத்தினார் என்று தெரிகிறது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? என்று ஆலோசித்து அடுத்த வாரம் முடிவு எடுப்பதாக கூறி வழக்கின் விசாரணையினை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.