எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க: அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு
மக்கள் தங்கள் குறைகளை கூறும் போது "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க" என்று கூறி அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். விழுப்புரம், அருங்குறுக்கையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, குடிநீர் பிரச்சனை பற்றி அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்முடி, "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்களா? அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எல்லோருக்கும் நல்லதைச் செய்யவேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ரோடு போட்டது நான், பஸ்விட்டது நான், குடிதண்ணீர்விட்டது நான்! குறை இருந்தால் எழுதிக்கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கள்
இதற்கு முன்பும் அமைச்சர் பொன்முடி பல சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஒருமுறை, சென்னை கூட்டத்தில் பேசும் போது, தாங்கள் இலவசமான பேருந்துகளை இயக்குகிறோம் என்று கூறிய பொன்முடி பெண்கள் 'ஓசி'யில் தானே பயணம் செய்கிறார்கள் என்று கூறினார். இது பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நாங்கள் ஒன்றும் உங்களை ஓசியில் பேருந்து விட சொல்லவில்லை என்று பல பெண்கள் இதற்கு பதிலளித்திருந்தனர். அதே போல் விழுப்புரத்தில் ஒருமுறை பேசிய அமைச்சர் பொன்முடி, மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் சாதியின் பெயரை கேட்டதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த வரிசையில், அமைச்சர் நேற்று பேசியதும் அவரின் சர்ச்சை பேச்சுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.