தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன்
மலிவு விலையில் மருந்துகள் உள்ளிட்ட தமிழக கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற கூட்டுறவு என்ற பெயரில் ஒரு புதிய செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைமை அலுவகத்தில் கூட்டுறவுத் துறையின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவுத் துறையின் சேவைகளை முழுமையாக அறிந்துகொள்வதற்கு ஏதுவாக கூட்டுறவு என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
மலிவு விலையில் மருந்துகள்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், "மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக தமிழ் மகள் தொடர் வைப்புத் திட்டம் மூலம் 8,19,419 சேமிப்புக் கணக்குகள் கூட்டுறவு வங்கிகளில் தொங்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிப்பின்படி தொடங்கப்பட உள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களில் 500 மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலம்தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.3 லட்சம் மானியமாக தரப்படுகிறது. கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். கூட்டுறவுத் துறையில் உள்ள கடன், நியாயவிலைக் கடை உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூட்டுறவு என்ற செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலி மூலமே வேளாண் கருவிகளை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்." என அறிவிக்கப்பட்டுள்ளது.