LOADING...
தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2025
08:42 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி: நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 12 செ.மீ., நாமக்கல்லில் 11 செ.மீ., சேலம் மாவட்டம் எடப்பாடியில் 10 செ.மீ., சங்கரி துர்க்கத்தில் 7 செ.மீ. மற்றும் தென்காசி மாவட்டம் கருப்பா நதி அணையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை

தென் மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுகிறது. அக்டோபர் 11 வரை லேசான அல்லது மிதமான மழை தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடியதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.