Loading...
இந்திய விசா விதிகளில் அதிரடி மாற்றம்: விசா பிரிவுகள் 13-லிருந்து 9-ஆகக் குறைப்பு; 70% எளிமையாகும் விண்ணப்பப் படிவம்
உள்துறை அமைச்சகம் இந்திய விசா முறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது

இந்திய விசா விதிகளில் அதிரடி மாற்றம்: விசா பிரிவுகள் 13-லிருந்து 9-ஆகக் குறைப்பு; 70% எளிமையாகும் விண்ணப்பப் படிவம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் விசா நடைமுறைகளை சர்வதேச தரத்திற்கு இணையானதாக மாற்றுவதற்கும், வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வருவதை மேலும் எளிமையாக்குவதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய விசா முறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்தியாவில் நடைமுறையில் உள்ள விசா வழங்கும் முக்கியப் பிரிவுகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களின் சுமை பெருமளவில் குறைக்கப்படவுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டின் விசா வழிகாட்டி மறுஆய்வின் ஒரு பகுதியாக, அதன் பல்வேறு பாகங்கள் மற்றும் பின்னிணைப்புகளில் புதிய திருத்தங்களை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அம்சங்கள்

விசா சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

தற்போதைய விசா வழிகாட்டல்களின்படி உள்ள 13 முக்கிய விசா பிரிவுகள் 9-ஆகக் குறைக்கப்படும்.

விசாக்களின் 49 துணைப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 23-ஆகக் குறைக்கப்படும்.

விசா விண்ணப்பப் படிவத்தில் நிரப்ப வேண்டிய தகவல்கள் மற்றும் கேள்விகளின் அளவு 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டு எளிமையான படிவமாக மாற்றப்படும்.

விசா படிவங்களில் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் தேவையற்ற கேள்விகள் நீக்கப்பட்டு, பயனர்-எளிமையான படிவங்கள் உருவாக்கப்படும்.

எளிமையான விசா முறையானது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களின் இந்திய வருகையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், அனைத்து நாடுகளின் விசா விண்ணப்பங்களுக்கும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT