
15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று(செப்.,1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், தென்காசி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் சென்னை மாவட்டத்தினை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதோடு, மாலை அல்லது இரவு நேரத்தில் ஓர் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மழை
வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இதனை தொடர்ந்து, நாளை(செப்.,2) ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், தென்தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45ல் இருந்து 55கி.மீ., வேகத்திற்கும் இடையே 65கிமீ., வேகத்திற்கும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் 3ம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்படும் என்றும், அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கவுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.