கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டாங்குளக்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இரண்டாம் பகுதியில் ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெறும். இதில் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். ஆனால் உண்மையில் அது பெண்கள் அல்ல ஆண்கள். கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் சாதி, மதம் போன்ற எவ்வித பாகுபாடையும் பாராமல் இக்கோயிலுக்கு வந்து புடவை அணிந்து, பூ சூடி, ஒப்பனைகள் செய்துகொண்டு தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள். கேரளாவின் ஐந்து முகம் கொண்ட தெய்வீக சமயவிளக்குகளை ஏற்றி கோயிலை சுற்றி வருகிறார்கள். இது இக்கோயிலின் சிறப்பு வேண்டுதலாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
குருத்தோலை பந்தல் அமைக்கப்பட்டு தெய்வ சிலை வைத்து வழிபாடு
கேரளாவில் நடைபெறும் இத்திருவிழா 19 நாட்கள் நடைபெறும் நிலையில் கடைசி 2 நாட்கள் மாலையில் துவங்கி விடியும் வரை இந்த சிறப்பு நிகழ்வு நடக்கும். இந்த புகழ்பெற்ற சமயவிளக்கு சடங்கின் பொழுது ராட்சத யானை திடம்பு என்னும் தெய்வ சிலையினை சுமந்து செல்லும் காட்சியையும் இரவு முழுவதும் காணமுடியும். மேலும் முதலில் கட்டப்பட்ட கோயிலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் 'குருத்தோலை பந்தல்' அமைக்கப்படும். மென்மையான தென்னை இலை, குருத்தோலை, வாழைப்பழம், பானை முதலியன கொண்டு கோயில் மாதிரி ஒன்று சிறிய அளவில் அமைக்கப்படும். இந்த கோயிலில் தான் திருவிழா நாட்களில் தெய்வத்தின் சிலை வைக்கப்படுமாம். பின்னர் திருவிழா முடிந்ததும், மீண்டும் சிலையானது கோயில் கட்டிடத்திற்குள் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.