பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது
பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாத சந்தேக நபர்களை மத்திய குற்றப்பிரிவு(சிசிபி) போலீசார் இன்று(ஜூலை 19) கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஜுனைத், சோஹைல், உமர், முதாசிர் மற்றும் ஜாஹித் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஐந்து நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பெங்களுரில் ஒரு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதலை மிக விரைவில் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத சதியின் விவரங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது
கைதுசெய்யப்பட்ட ஜுனைத் என்பவர் 2017 கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், அங்கு சில பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு வெடிகுண்டுகளை கையாளும் பயிற்சி பெற்றார். அவர்கள் 'ஜமாத்-இ-இஸ்லாமி' என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. சிறைச்சாலைக்குள், ஜுனைத் பயங்கரவாதிகளுடன் உரையாடிய போது, "எது வேண்டமானாலும் செய்வேன்" என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, 'ஜமாத்-இ-இஸ்லாமி' நிர்வாகிகள், ஜுனைத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி அளித்தனர். இந்நிலையில், இந்த பயங்கரவாத சதியின் விவரங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.