மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக பல மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க விவசாயிகள் இன்று 'மகாபஞ்சாயத்து' என்ற கூட்டத்தை நடத்த உள்ளனர். மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து ஆலோசிக்க உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அனைத்து காப்களின் மாபெரும் கூட்டம் இன்று நடைபெறும் என்று பாரதிய கிசான் யூனியன்(BKU) தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மகாபஞ்சாயத்தில் பங்கேற்க உள்ளனர்.
காவல்துறையினருக்கு 5 நாள் கெடு: விவசாயிகள்
இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்கள் சிலர் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயன்று கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச திட்டமிட்டிருந்தனர். அப்போது, அவர்களை வற்புறுத்தி அதை தடுத்த விவசாயிகள், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று ஒரு கூட்டத்தை கூட்டினர். WFI தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் செவ்வாய்கிழமை ஹரித்வாருக்குச் சென்று, தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டிருந்தனர். இதை தடுத்த விவசாயிகள் அமைப்பு, காவல்துறையினருக்கு 5 நாள் கெடு விதித்தது. விளையாட்டு வீரர்கள், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.