இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணன், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை கிராமத்திலிருந்து வந்தவர்.
முன்னதாக இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவனும் கன்னியாகுமரியில் இருந்து வந்த விஞ்ஞானி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாரயணன் பள்ளி கல்வியை தமிழ் வழியிலேயே பயின்றுள்ளார்.
சாதிக்க மொழி ஒரு தடையல்ல என்பதையும் இவரது முன்னேற்றம் எடுத்துக்காட்டுகிறது.
ஏழை விவசாய பின்னணியிலிருந்து வந்த நாராயணனுக்கு மூன்று சகோதரர்களும், இரு சகோதரிகளும் உள்ளனர்.
இவரும், இவரது உடன்பிறந்தவர்களும் கூரையில்லாத பள்ளியில் பயின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கிறது.
தொடக்கம்
விண்வெளி பயணத்தின் விதை
1969ம் ஆண்டு அவர் முதலாம் வகுப்பு படிக்கும் போது, அவரது பள்ளி ஆசிரியர்கள் நிலவில் மனிதன் வெற்றிகரமாக இறங்கியதை கூறியதை கேட்டே தனக்கு விண்வெளி ஆசை முதன்முதலில் வந்ததாக கூறுகிறார் நாராயணன்.
10ம் வகுப்பில் முதல் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற நாராயணன், குடும்ப சூழல் காரணமாக அவர் அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பில் சேர்த்தார்.
அதன் பின்னர், அவர் ஐ.ஐ.டி., கோரக்பூரில் முதல் ரேங்குடன் ஏ.எம்.ஐ.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங், ஐ.ஐ.டி., கோரக்பூரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.எச்டி., முடித்தார்.
பயணம்
இஸ்ரோவில் நாராயணின் பயணம்
1984ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.
தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசையில் அவரது நிபுணத்துவம் பல முக்கிய திட்டங்களில் கருவியாக உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், அவர் GSLV Mk III வாகனத்தின் C25 கிரையோஜெனிக் திட்டத்திற்கான திட்ட இயக்குநராக இருந்தார்.
இந்த ஏவுகணை வாகனத்தின் முக்கிய அங்கமான C25 நிலையை வெற்றிகரமாக உருவாக்க அவரது குழுவை வழிநடத்தினார்.
அவரது தலைமையின் கீழ், எல்பிஎஸ்சி 183 திரவ உந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு இஸ்ரோ பணிகளுக்காக கன்ட்ரோல் பவர் பிளான்ட்களை வழங்கியுள்ளது.
சந்திரயான் 3
சந்திராயன் 3 பயணத்தில் நாராயணின் பங்கு
அவரது பணி சந்திரயான்-2, சந்திரயான்-3, மற்றும் ஆதித்யா விண்கலம் போன்ற குறிப்பிடத்தக்க பணிகளில் இருக்கிறது.
பூமியில் இருந்து நிலவுக்கு சந்திராயன் 3 ஐ கொண்டு செல்லவும், நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம்.
சந்திரயான் 2 விண்கலம் மென்மையாக தரையிறங்குவதில் சில சவால்களை சந்தித்தது.
அத்திட்டம் வெற்றிபெறாத நிலையில், அதற்கான காரணம் என்ன; எங்கு தவறுகள் நிகழ்ந்தன என கண்டறியும் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார்.
இந்த குழு மிகக்குறுகிய காலத்தில் பிரச்னைகளை கண்டறிந்து சந்திராயன் 3ல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் வழிகாட்டியது.
விருது
நாராயணனுக்குக் கிடைத்த விருதுகள்; எதிர்கால பயணம்
ஐஐடி காரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப் பதக்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் வழங்கிய சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது 2018 உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளுடன் அவரது கல்வித் திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Aeronautical Society of India, சார்பில் சந்திரயான்-3, ஆதித்யா எல் -1,டிவி டி1 உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மனித விண்வெளிப் பயணத்தில் கவனம் செலுத்துவது, அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்களை உருவாக்குவது, சந்திரயான்-4, ககன்யான் மிஷன், வீனஸ் மிஷன், மங்கள்யான்-2 மற்றும் மறுபயன்பாட்டு ஏவுகணையின் மேம்பாடு உட்பட இந்தியாவிலிருந்து பல முக்கிய பணிகளை உருவாக்குவது என நாராயணின் பங்களிப்பும், மேற்பார்வையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் இருக்கும்.