மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம்
தமிழ்நாடு மாநிலத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு 40,193 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பம் மீதான பரிசீலனைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. சென்னை கிண்டியில் இந்த பட்டியலினை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று(ஜூலை.,16)காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ளார். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 7.5% உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு என 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் சேலம் மாவட்ட மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தினை பிடித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் கலந்தாய்வு குழு வரும் ஜூலை 20ம் தேதி துவக்கம்
அவரைத்தொடர்ந்து தருமபுரியை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்திலும், காஞ்சிபுரம் மாணவனான முருகன் 560 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தினையும் பிடித்துள்ளனர். 2023ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 5 மாணவர்களும், 5 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் கலந்தாய்வு குழு வரும் ஜூலை 20ம் தேதியும், 2ம் குழு ஆகஸ்ட் 9ம் தேதி மற்றும் 3ம் கலந்தாய்வு குழு ஆகஸ்ட் 31ம் தேதியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3ம் சுற்றின் கலந்தாய்வில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான இறுதி கலந்தாய்வு குழு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.