சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி
ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கணேசமூர்த்திக்கு, நேற்று காலை திடீர் உடலில் அசௌகரியமும், வாந்தி மயக்கமும் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ECMO சிகிச்சையில் கணேசமூர்த்தி
ஆரம்பகட்ட சிகிச்சையை தொடர்ந்து நேற்று மதியம் 2.30 மணியளவில், இரண்டு டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், கணேசமூர்த்தி. சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தி, மதிமுக தலைவர் துரை வைகோ மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ECMO சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். அதோடு, மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி, அ.தி.மு.க.வின் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.