சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023ல், 'மக்களைத் தேடி மேயர்'என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, பொது மக்களின் குறைகளை கண்டறிந்து அதற்கான உடனடி தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, ராயபுரம் வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்குவட்டார துணைக்கமிஷனர் அலுவலகத்தில் இதன் முதல்கட்டமாக 'மக்களை தேடி மேயர்' சிறப்பு முகாம் நிகழ்ச்சியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார். இதில் மேயர் ஆர்.பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப்பெற்று அதன் குறைகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். நேற்று(மே.,3)நடந்த இந்த முகாமில் பள்ளிக்கூடத்தில் கட்டிட வசதி, சாலை வசதி, குடியிருப்பு வசதி, மழைநீர் வடிகால் வசதி, உள்ளிட்ட 401கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த மனுக்களுள் 53மனுக்கள் மீது மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டது
இதேபோல் சொத்துவரி மீதான புகார் மனு குறித்தும் உடனடியான தீர்வினை மேயர் அளித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 5 பேருக்கு மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்கள், 17 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பெட்டகங்களை வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் 10 பயனாளிகளுக்கும், தலா 12 ஆயிரம் முதியோர் ஓய்வுத்தொகை மற்றும் உதவி தொகை 5 பயனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பழங்குடியினர் இன சான்றிதழ்கள் 5 பேருக்கும், பட்டா மேம்பாடு மேல்முறையீடு ஆணைகள் 5 பேருக்கும், 2 பேருக்கு வாரிசு சான்றிதழ் மேல்முறையீடு ஆணைகள், 5 பேருக்கு காலதாமத பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.