சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தாரில் உள்ள 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 25,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுக்மாவின் தொண்டமார்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய IED வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் கோப்ரா பட்டாலியனின் ஒரு வீரர் காயமடைந்தார். அந்த ராணுவ வீரர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் 20 இடங்களில், 12 பழங்குடியினருக்கும், ஒன்று பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக ராஜ்நந்த்கான் தொகுதியில் 29 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சித்ரகோட் மற்றும் தண்டேவாடா தொகுதிகளில் தலா ஏழு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
2018 தேர்தலில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ்
சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான தீபக் பைஜ் (சித்ரகோட்), அமைச்சர்கள் கவாசி லக்மா (கோண்டா), மோகன் மார்கம் (கோண்டகான்) மற்றும் முகமது அக்பர் (கவர்தா) மற்றும் மறைந்த தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் சவீந்திர கர்மா (தந்தேவாடா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர்கள் ஆவர். சத்தீஸ்கர் மாநில கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலைவரான காங்கிரஸின் கிரீஷ் தேவாங்கனை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் ராமன் சிங், ரஞ்சன்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 71 இடங்கள் உள்ளன. 2018 தேர்தலில், 2003 முதல் சத்தீஸ்கரை ஆட்சி செய்து வந்த பாஜகவை காங்கிரஸ் பெரும்பான்மையில் தோற்கடித்தது.