'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து நேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, " இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தங்கள் உடலை வருத்தி வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகாமல் இருக்க, 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது தீவிர வேலைகளில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
24 மணிநேரத்திற்குள் மாரடைப்பால் உயிரிழந்த 10 பேர்
இந்த சம்பவம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது என்றும் அந்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகி உள்ளது என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத்தில் ஒரு மாபெரும் 'கர்பா' நடன நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 பேர், 24 மணிநேரத்திற்குள் மாரடைப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரும் பதின்வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் ஆவார். இதில் 13 வயதுடைய ஒரு சிறுவனும் மாரடைப்பால் உயிரிழந்தான். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதற்கு பதிலளித்துள்ளார்.