காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகல கொண்டாட்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவன் வாயால் அம்மையேயென அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு பாரதியார் சாலையில் ஓர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மையார் வரலாற்றினை நினைவுகூரும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி,இந்தாண்டும் இக்கோயிலில் மாங்கனி திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி, இன்று(ஜூலை.,2)காலை பிச்சாண்டவருக்கு மாங்கனி இறைக்கும் நிகழ்வு நடந்தது. பிச்சாண்டமூர்த்தியாக சிவபெருமான் பவளக்கால் சப்பரத்தில் உலாவந்ததையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மாங்கனியுடன் சாமித்தரிசனம் செய்தனர். பின்னர் குழந்தைவரம், திருமணம் நடக்கவேண்டும் என வேண்டுவோர்,என அவரவர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவேண்டும் என வேண்டிக்கொண்டு இறைவனை நோக்கி மாங்கனிகளை எறிந்தனர். அவ்வாறு வீசப்படும் மாங்கனிகளை பிரசாதமாகப்பெற வீதியுலாவில் கலந்துகொண்டோர் போட்டிப்போட்டு மாங்கனிகளை பிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.