மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது. சிசோடியா தாக்கல் செய்த இருவேறு ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 17ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது. 338 கோடியை அவர் மோசடி செய்ததாக கூறப்படுவது மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதால், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே மூன்று மாதங்களுக்கு பிறகு, விசாரணை மந்தமாகவோ அல்லது மெதுவாகவோ நடந்தால், சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.
'லஞ்சம் கொடுக்கப்படும் என்ற அனுமானத்தில் சிசோடியாவை பிடித்து வைத்திருக்க முடியாது': உச்ச நீதிமன்றம்
சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் சிசோடியாவுக்கு எதிரான ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதற்கு இந்த உத்தரவு ஒரு அறிகுறி என்று அமலாக்க இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, டெல்லி மதுபானக் கொள்கையை மாற்றியமைக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது குற்றத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றால், சிசோடியா மீதான பணமோசடி வழக்கை நிரூபிப்பது கடினம் என்று அமலாக்க இயக்குநரகத்திடம் உச்ச நீதிமன்றம் கூறியது. லஞ்சம் கொடுக்கப்படும் என்ற அனுமானத்தில் சிசோடியாவை பிடித்து வைத்திருக்க முடியாது என்றும் சட்டத்தின் கீழ் என்ன பாதுகாப்பு இருந்தாலும், அது வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது.