நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட மணிப்பூர் பெண்கள்: வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்
ஒரு வருடத்திற்கு முன் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், அந்த சம்பவம் குறித்த கொடூரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் மணிப்பூரில் மிகப்பெரும் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின் போது, இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கிய ஆதிக்க சாதி கூட்டம், அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்தது. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கை மூலம் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதற்கு முன், அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் ஜீப்பில் ஏறியதாகவும், காவல்துறை ஓட்டுநரிடம் தங்களை காப்பாற்றும்படி கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
வன்முறை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறை
அப்போது அந்த பெண்களுடன் இரண்டு ஆண்களும் போலீசாரிடம் தஞ்சம் அடைந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், அப்போது அவர்களை காப்பாற்ற மறுத்த அந்த ஓட்டுநர், தன்னிடம் வண்டி சாவி இல்லை என்றும் கூறி இருக்கிறார். அதன் பிறகு, ஆதிக்க சாதி கூட்டத்திற்கு உதவும் வகையாக அங்கிருந்த போலீசார் அனைவரும் அந்த பகுதியை வெளியேறியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த அனைத்து போலீஸாரும் அந்த இடத்தை காலி செய்தனர். அதன் பின், ஒரு பெரிய கும்பல் வாகனத்தில் இருந்த பழங்குடியினரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்து சென்றது.