மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்
மணிப்பூர் கலவரம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு பெரும் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஆதிக்க சமூகமான மெய்த்தே சமூகத்தை பட்டியலினத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அடுத்து, மணிப்பூரின் 30 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒரு பேரணியை நடத்தினர். அதை தொடர்ந்து பெரும் கலவரம் அம்மாநிலத்தில் வெடித்தது. இந்த கலவரம் பல நாட்களாகியும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேற்று, மணிப்பூரில் உள்ள பிஷ்னுபூர்-சுராசந்த்பூர் இடையேயான எல்லைப் பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், கடந்த மே 3ஆம் தேதியில் மாத கடைசில் இருந்து மணிப்பூரில் நடந்து வரும் கலவரங்கள் குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மணிப்பூர் அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறுவாழ்வு முகாம்கள், ஆயுதங்கள் மீட்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பழங்குடியினர் மற்றும் மெய்த்தே சமூகத்திற்கு ஆதராக இரு வெவ்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.