மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
நேற்று, (பிப்ரவரி 15) வியாழக்கிழமை இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் எஸ்பி அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர். அதற்கு முதல்நாள், சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிய ஒரு வீடியோவில், ஆயுதம் ஏந்திய நபர்களுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட காவல்துறையின் தலைமைக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே இந்த கலவர கும்பல், எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டது. இது குறித்து எக்ஸ் தளத்தில் மணிப்பூர் காவல்துறை கூறியதாவது,"சுமார் 300-400 பேர் கொண்ட கும்பல் இன்று SP CCP அலுவலகத்தை முற்றுகையிட முயன்றது, கற்களை வீசியது."
மணிப்பூரில் கலவரம்
காவல்துறை தரப்பு கூறுவது என்ன?
"நிலைமையைக் கட்டுப்படுத்த, RAF உட்பட பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவதன் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கிறது. விஷயங்கள் கண்காணிப்பில் உள்ளன" என்று காவல்துறை மேலும் கூறியது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் வரை காயம் அடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. முதல்நாள், கலகக்காரர்களுடன் இருந்தமைக்காக தலைமைக் காவலர் சியாம்லால்பாலை, மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தார் சுராசந்த்பூர் எஸ்பி. அதோடு, சியாம்லால்பால் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. கூடுதலாக, சியாம்லால்பாலுக்கு முன் அனுமதியின்றி ஸ்டேஷனை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவரது ஊதியம் மற்றும் படிகள், விதிகளின் கீழ், அனுமதிக்கப்படும் வாழ்வாதார கொடுப்பனவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.