மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கண்காணிக்க மூன்று முன்னாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட உள்ளது. நீதிபதி ஷாலினி ஜோஷி(பாம்பே உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) மற்றும் நீதிபதி ஆஷா மேனன்(டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) ஆகியோரும் இந்த குழுவில் அடங்குவர். மறுவாழ்வு, இழப்பீடு போன்ற விசாரணை அல்லாத விஷயங்களை கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். மக்களுக்கு சட்டத்தின் மீது இருந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
மணிப்பூரின் வழக்குகளின் விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தத்தா பத்சல்கிகரை நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மற்ற மாநிலங்களில் இருந்து DySP பதவிக்கு குறையாத 5 அதிகாரிகளை நியமிக்க நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட 42 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை(SIT) கண்காணிக்க பிற மாநிலத்தை சேர்ந்த 6 டிஐஜி அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு SIT குழுக்களிலும் பிற மாநிலத்தை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டராவது இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது தவிர, மணிப்பூர் இனமோதல்களின் போது பெண்களுக்கு எதிராக நடந்த 11 வன்முறை வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன.