மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவந்த வன்முறை அதன் தலைநகர் இம்பாலுக்கு பரவியதையடுத்து, வன்முறையாளர்களை "பார்த்தவுடன் சுட வேண்டும்" என மணிப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 55 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவு அதிரடிப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. "எச்சரிக்கை, வற்புறுத்தல் ஆகியவற்றுக்கு வன்முறையாளர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், அப்படிப்பட்ட தீவிர நிலையில் பார்த்தவுடன் அவர்களை சுடுங்கள்" என்று மணிப்பூர் கவர்னர் நேற்று மாலை கையொப்பமிட்ட உத்தரவு கூறுகிறது. மேலும், இந்த உத்தரவுகளை பிறப்பிக்க மாநில நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவு நடவடிக்கைப் படையைச் சேர்ந்த சுமார் 500 பேர், ஒரு கலகக் கட்டுப்பாட்டுப் போலீஸ் ஆகியோர் இம்பாலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது
புதன்கிழமை தொடங்கிய வன்முறையைக் கட்டுப்படுத்த போராடி வரும் ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறையுடன் இணைந்து விரைவு நடவடிக்கைப் படையும் செயல்படும். நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆன்லைன் மூலம் இரண்டு கூட்டத்தை நடத்தி மணிப்பூர் மற்றும் அதன் அண்டை மாநில முதல்வர்களுடன் பேசினார். சில நாட்களாக, மணிப்பூரில் இருக்கும் வீடுகள் மற்றும் கடைகள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.