மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து INDIA கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள்(ஜூலை.,24)போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. மணிப்பூர் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் அளித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று(ஜூலை.,21)காலை 11 மணிக்கு அவை துவங்கியதுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து விவாதிக்க அரசு தயாராகவுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தகவல்
எனினும் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை கூட்டமானது வரும் ஜூலை.,24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது INDIA கூட்டணி கட்சிகள் மத்திய அரசினை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வரும் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், நாளை(ஜூலை.,23) சென்னையில் தாய்மையினை அவமதிக்கும் செயலினை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து எம்.பி.கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் விவகாரத்தில் ஹீராதாஸ் உள்ளிட்ட 4 பேரினை கைது செய்த போலீசார் அவர்களை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.