தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட டிரைவரின் உடல் எலும்புக்கூடுகளாக செப்டிக் டேங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை-தேவகோட்டை பகுதியிலுள்ள கம்பர் தெருவினை சேர்ந்தவர் சீராளன்.
இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பின்பக்கமுள்ள மற்றொரு வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த வீட்டில் சுமார் 7வருடங்களுக்கு முன்னர் பாண்டியன்-சுகந்தி என்னும் தம்பதியினர் வாடகைக்கு இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர்.
பாண்டியன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் வேலை விஷயமாக கோவை சென்ற பாண்டியன் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி சுகந்தி கூறி வந்துள்ளார்.
பாண்டியனை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கொலை
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது
இதனால் சிறிதுக்காலத்திற்கு பிறகு சுகந்தி அந்த வீட்டினை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தேவகோட்டை வீரபாண்டியபுரம் நடுத்தெருவில் தற்போது சுகந்தி தையல் கடை ஒன்றினை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே தனது வீட்டின் செப்டிக் டேங்க்கினை சீராளன் நேற்றுமுன்தினம் சுத்தம் செய்துள்ளார்.
அப்போது அதில் மனித எலும்புக்கூடுகள், ஒரு கைலி, சட்டை மற்றும் உடைந்த ஜன்னல் கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளது.
இதனை கண்டு அதிர்ந்துபோன சீராளன் தேவகோட்டை டவுன் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் அங்கு வந்து போலீசார் விசாரணை செய்ததில் அது பாண்டியனின் கைலி என்பது உறுதியாகியுள்ளது.
பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் சுகந்தியிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.