மனைவிக்கு ஜீவனாம்சமாக 20 மூட்டைகளில் ₹80,000 மதிப்பிலான நாணயங்கள்; நீதிமன்றத்தை திகைக்கவைத்த கணவர்
கோவையில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ₹80,000ஐ நாணயங்களாக மூட்டைகளில் கொடுத்தது நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, இந்தச் சம்பவம் புதன்கிழமை (டிசம்பர் 18) கோவையில் உள்ள கூடுதல் குடும்ப நீதிமன்றத்தில் நடந்துள்ளது. கால் டாக்சி உரிமையாளரும் ஓட்டுநருமான 37 வயது நபர் தனது மனைவிக்கு இடைக்கால பராமரிப்புத் தொகையாக ₹2 லட்சத்தை வழங்குமாறு நீதிமன்றம் கேட்டுள்ளது. ஆன்லைனில் பரவும் வைரல் வீடியோ ஒன்று, நாணயங்கள் நிரப்பப்பட்ட இரண்டு வெள்ளைப் பைகளை கையில் வைத்துக்கொண்டு, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்து வந்து, அவற்றை காருக்குள் வைப்பதைக் காட்டுகிறது.
நீதிபதி உத்தரவு
அந்த நபர் 20 மூட்டைகளில் ரூபாய் 2 மற்றும் 1 ரூபாய் நாணயங்களை கோவையில் உள்ள கூடுதல் குடும்ப நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். அவர் ₹80,000 அளவிற்கு நாணயங்களைச் சமர்ப்பித்திருப்பதைக் கண்ட குடும்ப நீதிமன்ற நீதிபதி, அந்தத் தொகையை நோட்டுகளாகச் செலுத்துமாறு அந்த நபருக்கு அறிவுறுத்தியதாக அறிக்கை கூறுகிறது. இதையடுத்து மறுநாள், வியாழன் அன்று, அவர் நீதிபதி அறிவுறுத்தியபடி, நாணயத் தாள்களை மாற்றி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மீதமுள்ள இடைக்கால பராமரிப்புத் தொகையான ₹1.2 லட்சத்தை விரைவில் வழங்குமாறு அந்த நபரிடம் நீதிபதி கூறியதாக கூறப்படுகிறது.