அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனை அப்பகுதி வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர். கடந்த சில வாரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய இந்த அரிக்கொம்பன் காட்டு யானை திருவில்லிபுத்தூர், குமுளி, மேகமலை வனப்பகுதிகளுக்குள் புகுந்து கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது. அங்கு சாலைகளில் நடமாடும் மக்களை விரட்டியதால் அவர்கள் பீதியடைந்து அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
இதனிடையே அரிக்கொம்பன் யானையின் அட்டகாசம் தொடர்ந்து வந்த நிலையில், ஏ.டி.எம்.மையத்தின் காவல் பணியில் இருந்த 65 வயதுடைய பால்ராஜ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயமுற்ற பால்ராஜை அங்கிருந்தோர் மீட்டு உடனே கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார். யானையால் தாக்கப்பட்ட பால்ராஜுக்கு தலையிலும், வயிற்று பகுதியிலும் பலத்தக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை அண்மையில் மோசமானதையடுத்து, நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக பால்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொழுது, வனத்துறை அமைச்சர் அவரை நேரில் சென்று சந்தித்து ரூ.50ஆயிரம் நிதியுதவி செய்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.