தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை கொண்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவதால், அவ்வப்போது அதிகாரிகள் திடீர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர், டாஸ்மாக் முறைகேடுகளில் சமீபத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 1,967 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கூடுதல் விலையில் விற்பனை செய்யும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
வங்கிகளோடு டாஸ்மாக் நிறுவனம் ஆலோசனை
மேலும் அவர், இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு காண கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதன்படி மது வாங்குவோர் அதற்கான தொகையினை முதல் கவுண்டரில் கணினி பில்லினை பெற்று கொண்டு, இரண்டாவது கவுண்டரில் அதற்கான பணத்தை செலுத்தி மதுபானத்தினை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையினை மாநிலம் முழுவதும் கொண்டுவருவதா அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொண்டு வருவதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து, ஜூன் மாத இறுதிக்குள் கியூஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையினை செலுத்தி மதுவை பெறுவதற்கான நடவடிக்கையினையும் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறார்கள். இம்முறையினை கொண்டுவர வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.